இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை இயக்குனர் பி.மதுசூதன் ரெட்டி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று பொதுமக்களின் நில அளவை தொடர்புடைய நிலுவை மனுக்கள் குறித்து நில அளவை மற்றும் வருவாய்த் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.வளர்மதி இ.ஆ.ப, அவர்கள் முன்னிலை வகித்தார்கள். நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை இயக்குனர் அவர்கள் 01.04.2024 முதல் 23.05.2024 வரை பொதுமக்களிடமிருந்து வரபெற்ற மனுக்கள் நிலுவை குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்கள். பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது அதிகபட்சம் 15 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் எனவும். குறிப்பாக இணைய வழி சான்றிதழ் மற்றும் நில அளவை பட்டா மாற்றம் தொடர்பான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது, அதன்படி இராணிப்பேட்டை மாவட்டத்தில் நிலுவையில் உள்ள மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் நில அளவை தொடர்பான மனுக்களை அளிக்கும் பொழுது அம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியர். கிராம நிர்வாக அலுவலர், நில அளவையாளர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிகபட்சமாக 45 நாட்களுக்குள் உட்பிரிவு பட்டா மாற்றம் தொடர்பான மனுக்கள் மீதும், பொதுவான பட்டா மாற்றம் தொடர்பான மனுக்கள் மீது அதிகபட்சம் 15 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும். ஆனால் அதற்கு குறிப்பிட்ட அதிகபட்ச காலத்தை தாண்டி பொதுமக்களின் மனுக்கள் நிலுவையில் உள்ளன. இது போன்று பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை குறிப்பிட்ட காலத்தில் நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துவது பணியில் மெத்தன போக்கை காட்டுகிறது.
வட்டாட்சியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், நில அளவையாளர்கள் இனி வரும் காலங்களில் நில அளவை மற்றும் பட்டா மாற்றம் தொடர்பான மனுக்களின் மீது உரிய காலத்தில் தீர்வு காண வேண்டும். உட்பிரிவு பட்டா தொடர்பான மனுக்கள் மீது 45 நாட்களுக்கு மேலும் பொதுவான பட்டா மாற்றம் தொடர்பான மனுக்கள் மீது 15 நாட்களுக்கு மேலும் நிலுவை வைத்துள்ள நில அளவையாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
உதவி இயக்குனர் நில அளவை அவர்கள் நகர்புற பகுதிகளில் ஒரு மாத காலத்திற்கு மேல் நிலுவையிலுள்ள மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடுதலாக ஒரு நில அளவையாளரை பணியமர்த்தி நிலுவை மனுக்கள் மீது தீர்வு காண செய்யவேண்டும். ஊரக மற்றும் நகர்புற பகுதிகளில் உட்பிரிவு பட்டா மாற்றம் மற்றும் பொதுவான பட்டா மாற்றம் . சான்றிதழ் தொடர்பான நிலுவையில் உள்ள மனுக்கள் மீது உடனடி தீர்வு காண வேண்டும். மாவட்ட வருவாய் அலுவலர், வட்டாட்சியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தி மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்படுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை இயக்குனர் அவர்கள் தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்ததாவது:- இராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் அதிகப்படியான நில அளவை தொடர்பான பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் நிலுவையிலுள்ளது. நிலுவையிலுள்ள மனுக்களை வருகின்ற 27.05.2024 அன்றுக்குள் முடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ச.வளர்மதி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு முன்னதாக, வாலாஜா மற்றும் ஆற்காடு வட்டாட்சியர் அலுவலகங்களில் நில அளவை பதிவேடுகள் மற்றும் நிலுவைப் பணிகள் குறித்து நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை இயக்குனர் பி.மதுசூதன் ரெட்டி, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சுரேஷ். வருவாய் கோட்டாட்சியர்கள் மனோன்மணி (இராணிப்பேட்டை), பாத்திமா (அரக்கோணம்), சென்னை மண்டல துணை இயக்குனர் சரவணன், நில அளவை உதவி இயக்குநர் பொன்னையன் மற்றும் நிலை அளவை, வருவாய்த் துறையினர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.
No comments:
Post a Comment