சோளிங்கர் அருகே நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு அதிகாரிகளிடம் வாக்குவாதம். - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 25 November 2023

சோளிங்கர் அருகே நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு அதிகாரிகளிடம் வாக்குவாதம்.


இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பாண்டியநல்லூர் ஊராட்சி  பாணாவரம் கூட் ரோடு பகுதியில் காவேரிப்பாக்கம்-அரக்கோணம் சாலைகளில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்த மான இடங்கள் உள்ளது. இதனை அப்பகுதியை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமிப்பு செய்து இருந்தனர். ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது. 

இந்த வழக்கின் முடிவில் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் உடனடியாக அகற்ற கோர்ட் உத்தரவிட்டது. அதன் பேரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அங்கிருந்த ஆக்கிரமிப்புகளை நெடுஞ் சாலைத்துறையினர் அகற்றினர். இந்நிலையில் அகற்றப்பட்ட இடங்களில் சிலர் மீண்டும் ஆக்கிரமிக்க தொடங்கினர். இதில் பலர் சுவர் எழுப்பியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் நேற்று முன்தினம்  ஜேசிபி இயந்திரத்துடன் சென்று ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றனர். 


அப்போது அங்கிருந்த சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சோளிங்கர் எஸ்.ஐக்கள் மோகன்ராஜ், பசலைராஜ் மற்றும் போலீசார் ஆக்கிரமிப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இடங்களை மீண்டும் அளவீடு செய்து அதன் பின்னர் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், அதுவரை கால அவகாசம் வேண்டும் என ஆக்கிரமிப்பாளர்கள் கோரிக்கை வைத்தனர். இதனை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டதால் அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர். 


இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரின் ஆக்கிரமிப்பு வீட்டை நெடுஞ்சாலை துறையினர் இடித்து விட்டு மீதமிருந்த சுவற்றை விட்டு சென்ற நிலையில் மீதமிருந்த மணிகண்டனுக்கு சொந்தமான வீட்டு சுவற்றை நேற்று அதிகாலை ஜேசிபி இயந்திரத்தின் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டதாக தெரிகிறது. இதை அறிந்த மணிகண்டன் மற்றும் அப்பகுதியை சேர்ந்த 10 க்கும் மேற்ப்பட்டோர் வீட்டு சுவற்றை இடித்த மர்ம நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பாணாவரம் கூட்டு சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.


இந்த தகவல் அறிந்த சோளிங்கர் எஸ்.ஐ மோகன்ராஜ், கொண்டபாளையம் எஸ்.ஐ பசலைராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்ததையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் பரபரப்பும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad