நெமிலி பிடிஓ அதிகாரிகளை கண்டித்து கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 20 February 2024

நெமிலி பிடிஓ அதிகாரிகளை கண்டித்து கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்!


ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பிடிஓ அலுவலக வளாகத்தில் காலை 10 மணிக்கு பிடிஓக்கள் உள்ளிட்ட அலுவலக அதிகாரிகள் அனைத்து பணிகளுக்கும் மக்கள் பிரதிநிதிகளான ஒன்றிய கவுன்சிலர்கள், பஞ்சாயத்து தலைவர்கள் உள்ளிட்டோரிடம் லஞ்சம் கேட்பதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய கவுன்சிலர். மணிமேகலை தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக நெமிலி யூனியன் துணை சேர்மன். தீனதயாளன் கலந்து கொண்டு பேசியதாவது: நெமிலி பிடிஓ அலுவலகத்தில் மக்கள் பணிகளுக்காக டெண்டர் விடப்பட்டு அந்த பணிகளை செய்து முடித்து பல மாதங்கள் ஆகியும் அவர்களுக்கு வழங்க வேண்டிய நிதியை முறையாக அதிகாரிகள் விடுவிப்பதில்லை. மேலும் அனைத்து பணிகளுக்கும் உள்ளாட்சி பிரதிநிதிகளை தொடர்ந்து அலைய வைக்கின்றனர். 


மேலும் பணிகளுக்கு 4 சதவீதம் கமிஷனை கேட்டு மிரட்டும் தொனியில் பேசுகின்றனர். குறிப்பாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை நெமிலி பிடிஓ அலுவலக அதிகாரிகள் தொடர்ந்து நிராகரித்து அவமதித்து வருவது வாடிக்கையாகிவிட்டது. கீழ்வீதி , கீழ்களத்தூர், பெரப்பேரி, எலத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் நடந்து முடிந்த சாலை பணிகளுக்கு நிதியை விடுவிக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். மேலும் கடவுளின் பெயர் கொண்ட தெருக்களுக்கு போடப்பட்ட ரோடுகளுக்கு பில் பாஸ் செய்ய முடியாது என்று கூறி மத நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர் என்று அவர் பேசினார். 


இதனைத்தொடர்ந்து பிற்பகல் 1 மணிவரை அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வராததால் ஆத்திரமடைந்த 200 க்கும் மேற்பட்டோர் பிடிஓ அலுவலகத்தை முற்றுகையிட்டனர். உடனடியாக வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பிடிஓக்கள் நேரில் வந்து விளக்கம் கொடுத்தால் மட்டுமே இங்கிருந்து கலைந்து செல்வோம் என்று கூறினர். பின்னர் அதே  இடத்தில் அமர்ந்து மதிய உணவை சாப்பிட்டனர். 


இதனைத்தொடர்ந்து மாலை 4 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்த பிடிஓ சையத் ஷாநவாஸ், இன்ஸ்பெக்டர்கள். அரக்கோணம் பழநிவேல், நெமிலி லட்சுமிபதி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். சுமார் 7 மணிநேரம்‌ போராட்டம் நடந்ததால் பிடிஓ அலுவலக‌ வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா

No comments:

Post a Comment

Post Top Ad