நெமிலி அருகே கல்லாறு மேம்பாலம் கட்டும் பணி தொடக்கம்! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 29 April 2024

நெமிலி அருகே கல்லாறு மேம்பாலம் கட்டும் பணி தொடக்கம்!


ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த விஜயபுரம் அருகே அரக்கோணம் நெமிலி ரோட்டில் கல்லாறு தரைப்பாலம் உள்ளது. வேலூரில் இருந்து காவேரிப்பாக்கம், பனப்பாக்கம், நெமிலி வழியாக அரக்கோணம் செல்லும் வாகனங்கள் அனைத்தும் இந்த பாலத்தின் வழியாகத்தான் செல்ல வேண்டும்.


கடந்த ஆண்டு பெய்த கனமழையால் கல்லாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து தரைப்பாலம் மூழ்கி துண்டு துண்டாக உடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு மிகவும் மோசமான நிலைக்கு சென்றது. இதனால் லேசான வெள்ளம் வந்தாலே தரைப்பாலம் வழியாக அரக்கோணத்திற்கு பேருந்துகள் செல்ல முடியாது மாறாக சேந்தமங்கலம் வழியாக 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு தான் வாகனங்கள் அரக்கோணத்திற்கு செல்ல முடியும்.


அத்துடன் இந்த தரைப்பாலம் மிகவும் குறுகலாகவும் இருபுறமும் தடுப்புச்சுவர் இல்லாமல் இருப்பதால் வாகனங்களில் செல்லும் பலர் அடிக்கடி விபத்தில் சிக்கி கீழே விழுந்து படுகாயங்களுடன் செல்வது வேடிக்கையாகிவிட்டது. இதனை தொடர்ந்து கல்லாறு தரைப்பாலத்தை மேம்பாலமாக கட்டுவதற்கு சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ. வடிவேலு தலைமையில் ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


அதனைத்தொடர்ந்து வேலூர் கோட்ட நெடுஞ்சாலைகள் திட்டம் துறையின் சார்பில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாடு திட்டத்தின் (சிஆர்ஐடிபி) கீழ் ரூ.13 கோடி மதிப்பீட்டில் 15 மீட்டர் அகலமும், 90 மீட்டர் நீளமும் கொண்ட புதிய மேம்பாலம் கட்ட கடந்த ஜனவரி 22- ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கான பணிகள் தொடர்ந்து நடந்து வந்த நிலையில் தற்போது மாற்றுப்பாதை அமைத்து மேம்பாலம் கட்டும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.


இந்த பணிகள் வரும் ஜனவரி மாதத்திற்குள் முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா 

No comments:

Post a Comment

Post Top Ad